கீழடியில் 11ம் கட்ட அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டெடுப்பு
சிவகங்கை, 17 மே (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் நடைபெற்று வரும் 11ம் கட்ட அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் கஜேந்திரன் என்பவரது நிலத்தில் மார்ச் 18 முதல் 11ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இ
வட்டப்பானை


சிவகங்கை, 17 மே (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் நடைபெற்று வரும் 11ம் கட்ட அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கஜேந்திரன் என்பவரது நிலத்தில் மார்ச் 18 முதல் 11ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், செங்கல் கட்டுமானங்கள், சாயக் கிண்ணங்கள், குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானைகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு 5ம் கட்ட அகழாய்வின்போது வித்தியாசமான வடிவிலான வட்டப்பானை ஒன்று மேற்பகுதி சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. அதன் பயன்பாடு குறித்து தெளிவான தகவல் கிடைக்காத சூழல் நிலவியது.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 11ம் கட்ட அகழாய்வில் அதே போன்ற சிறிய அளவிலான வட்டப்பானை முழுமையான வடிவில் கிடைத்துள்ளது.

மேலும் அருகிலேயே சேதமடைந்த சாயக் கிண்ணங்கள், கருப்பு நிற பானை மற்றும் இருவண்ண வாய் அகன்ற சுடுமண் பாத்திரங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

அகழாய்வில் தோண்டப்பட்ட ஏழு குழிகளிலும் தொடர்ந்து செங்கல் கட்டுமானங்கள் கிடைத்து வருவதால், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான கட்டட அமைப்புகள் கீழடியில் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam