கொடைக்கானல் மலர் கண்காட்சியைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
திண்டுக்கல், 17 மே (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசனில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை காண வெளி மாவட்டங்கள்
கொடைக்கானல்  மலர் கண்காட்சியைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்


திண்டுக்கல், 17 மே (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசனில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படுகிறது.

இந்த மலர் கண்காட்சியை காண வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணகள் வருகின்றனர்.

இந்தாண்டுக்கான 63-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற்று வருகின்றது. மலர் கண்காட்சியையொட்டி நடவு செய்யப்பட்ட சால்வியா, பிங்க் அஸ்டர், டேலியா உட்பட 26 வகையான 2 லட்சம் மலர்ச் செடிகள் பூத்துக் குலுங்கின.

பூங்கா நுழைவாயிலில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயற்கை அருவியுடன் கூடிய மீன் குளம் அமைக்கப்பட்டு, அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகள் இந்த சிறப்பு ஏற்பாடுகளை மிகுந்த ஆர்வத்துடன் ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இந்த ஏற்பாடு வருகையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

லட்சக்கணக்கான மலர் நாற்றுகள் மற்றும் செடிகளைக் கொண்டு விலங்குகள், பறவைகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு வடிவங்களில் பிரம்மாண்ட மலர் மற்றும் காய்கறிச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு பொதுமக்களைக் கவர்ந்து வருகின்றன.

கோடை விழாவின் ஒரு பகுதியாகப் படகுப் போட்டிகள், நாய் கண்காட்சி மற்றும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன

மாலை வேளையிலும் சுற்றுலாப் பயணிகள் மலர்களை கண்டு ரசிப்பதற்காக வண்ணமயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகப் பூங்காவைப் பார்வையிடும் அனுமதி நேரமும் மாலை 7 மணி வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b