நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் 2 முறை வெடி விபத்து - பெண் உட்பட 4 பேர் கைது
தஞ்சாவூர், 17 மே (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காவல் உட்கோட்டம் சுவாமிமலை காவல் சரகத்தில் உள்ள திருவலஞ்சுழி அருகே மணப்படையூர் செல்லும் வழியில் அன்னை மாதா ஃப்பயர் ஒர்க்ஸ் என்கிற நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடம் இயங்கி வருகிறது. தற்போது பல
Kumbakonam


தஞ்சாவூர், 17 மே (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காவல் உட்கோட்டம் சுவாமிமலை காவல் சரகத்தில் உள்ள திருவலஞ்சுழி அருகே மணப்படையூர் செல்லும் வழியில் அன்னை மாதா ஃப்பயர் ஒர்க்ஸ் என்கிற நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடம் இயங்கி வருகிறது.

தற்போது பல இடங்களில் கோவில்களில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற்று வருவதால் திருவிழாக்களுக்கு தேவையான நாட்டு வெடிகள் இங்கு அதிகளவில் தயாரித்து இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், மே 15 ஆம் தேதி காலை திடீரென இங்கு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால், நாட்டு வெடிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கட்டடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

இந்த வெடி விபத்தின் சத்தம் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் ஊழியர்கள் பணிக்கு வரும் முன்னரே இந்த விபத்து நடைபெற்றதால், நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

இதே போன்று, கடந்த வாரமும் இதே கூடத்தில் நள்ளிரவு நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டு, அக்கட்டடம் தரைமட்டமானது.

தொடர்ந்து இருமுறை வெடி விபத்து ஏற்பட்ட காரணத்தினால் அப்பகுதியில் இருப்பவர்கள் அச்சமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சுவாமிமலை காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

இரண்டு முறை வெடி விபத்து நடைபெற்ற காரணத்தினால், இதில் ஏதேனும் சதி வேலை உள்ளதா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது இப்படி செய்தார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

அதில் பல உண்மை தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக அரசு உரிமம் இன்றி, வெடி பொருட்களை தயாரித்து வந்ததும், அவற்றை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அலட்சியமாக கையாண்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கிருந்து நாட்டு வெடிகள் தயாரிக்க பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ எடையிலான மருந்துகள் மற்றும் காலி குப்பிகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமாக திருவலஞ்சுழியை சேர்ந்த அருள் டேவிட் (33), அருள்செல்வம் (48), மணிகண்டன் (38) மற்றும் சசி மேரி (38) ஆகிய 4 பேரையும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சட்டவிரோதமாக நாட்டு வெடி தயாரிப்பது, வெடி மருந்ததை அஜாகரதையாக கையாண்டது, வெடி மருந்தை பதுக்கி வைத்தல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நாட்டு வெடி தயாரிப்பு கூடமும் வருவாய்த் துறையினரால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN