Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 மே (ஹி.ச.)
நீட்-யுஜி 2026 தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் நீட்-யுஜி தேர்வு கணினி வழி தேர்வாக (CBT) நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை முற்றிலும் தடுக்க முடியும் என அரசு நம்புகிறது.
இதற்கிடையே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026 ஜூலை 1-ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், பத்தாம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கு (R3) பொதுத்தேர்வு கிடையாது.
மே 15-ம் தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023-க்கு ஏற்ப, மாணவர்கள் படிக்கும் மூன்று மொழிகளில் குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மாணவர்களிடையே பன்மொழித் திறனை வளர்க்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பாஜக-காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
மத்திய அரசின் கல்விக் கொள்கைகளில் பல்வேறு தோல்விகள் உள்ளதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
குறிப்பாக, நீட்-யுஜி 2026 வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறையில் உள்ள சிக்கல்கள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் செயல்படுத்தப்படும் மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை மற்றும் கல்வித் துறையில் நிலவும் குறைபாடுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் ஹுசைன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சையத் ஷாநவாஸ் ஹுசைன்,
குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் கூட ராகுல் காந்தி அரசியல் செய்யப் பார்க்கிறார்.
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க, மத்திய கல்வி அமைச்சர் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
என்று ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b