நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - ஊழல் அதிகாரிகளை அரசு பாதுகாப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
பீகார், 18 மே (ஹி.ச.) நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, நீட்-யுஜி 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் எம
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - ஊழல் அதிகாரிகளை அரசு பாதுகாப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு


பீகார், 18 மே (ஹி.ச.)

நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, நீட்-யுஜி 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்ததுடன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நேற்று, மத்திய புலனாய்வுத் துறை (CBI), குற்றம்சாட்டப்பட்ட மனிஷா குருநாத் மந்தாரேவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேல் விசாரணைக்காக 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரியது. தேசிய தேர்வு முகமை (NTA) குழுவில் உறுப்பினராக இருந்த மந்தாரே, தேர்வுக்கான நிபுணராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். NTA பின்பற்றிய முழு நடைமுறையையும் CBI விசாரித்து வரும் நிலையில், அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

நீட் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. திருத்த நடவடிக்கையாக, அடுத்த ஆண்டு முதல் நீட்-யுஜி தேர்வு கணினி வழித் தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, ஊழல் புரிந்தவர்களையும் குற்றவாளிகளையும் அரசு பாதுகாப்பதாக பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரிய ஜனதா தள (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ்,

என்.டி.ஏ அரசின் கீழ், ஊழல் செய்பவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். நீட் வினாத்தாள் கசிவது இது முதல் முறையல்ல. பீகாரிலும் தொடர்ச்சியாக வினாத்தாள்கள் கசிந்துள்ளன.

ஆனாலும், எந்த ஒரு மூத்த அதிகாரியும், பாஜக தலைவரும் தண்டிக்கப்படவில்லை, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b