ஊட்டி மலர் கண்காட்சி இன்று கோலாகல தொடக்கம்
உதகை, 18 மே (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 128-வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா விழாவை தொடங்கி வைக்கிறார். கண்காட்சியை முன்னிட்டு பூங்கா முழுவதும் பல லட்சம
மலர்


உதகை, 18 மே (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 128-வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா விழாவை தொடங்கி வைக்கிறார்.

கண்காட்சியை முன்னிட்டு பூங்கா முழுவதும் பல லட்சம் மலர் நாற்றுகள் வளர்க்கப்பட்டு, பல்வேறு நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மலர் தொட்டிகள் பூங்காவின் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காட்சியளிக்கிறது.

இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவுவாயில் வடிவமைப்பு மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு, ஊட்டி மலை ரயில், மகாபலிபுரம் சிற்பக்கலை, திருவாரூர் தேர் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள் அலங்காரங்களும் இடம் பெற்றுள்ளன.

தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களை மையப்படுத்திய மலர் வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக பல லட்சம் மலர்களைக் கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கள்ளிச்செடி மாளிகை மற்றும் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு, அரியவகை தாவரங்கள் மற்றும் அழகிய மலர்ச்செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக நூற்றுக்கணக்கான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சுற்றுலா பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த மலர் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P