மாற்றுத்திறனாளி பெண் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - இரண்டாவது குற்றவாளி கைது
புதுக்கோட்டை, 19 மே (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் சாந்தப்பட்டி பகுதியில் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான 35 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது வயதான தாயுடன் வசித
மாற்றுத்திறனாளி பெண் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - இரண்டாவது குற்றவாளி கைது


புதுக்கோட்டை, 19 மே (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் சாந்தப்பட்டி பகுதியில் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான 35 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனது வயதான தாயுடன் வசித்து வரும் பாதிக்கப்பட்ட பெண், ஆலங்குடியில் உள்ள அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வருகின்றார். இவர், சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்து அறிமுகமான இருவர், உங்களை வீட்டில் பத்திரமாக இறக்கிவிடுகிறோம் எனக் கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் பெண்ணை மணக்கொல்லை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த மழையூர் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மணக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் சேகர் ஆகிய இருவரும் இக்குற்றச் செயலில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சேகரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சேகரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக மழையூர் காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b