கேரளத்தில் த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை தொடக்கம் - செயலியில் மலையாள மொழி இணைப்பு
திருவனந்தபுரம் , 19 மே (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைத்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவுடன் த.வெ.க. அரசு அமைக்கப்பட்டத
K


திருவனந்தபுரம் , 19 மே (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைத்தது.

காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவுடன் த.வெ.க. அரசு அமைக்கப்பட்டது. கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளத்தில் அரசியல் செயல்பாடுகளை விரிவுபடுத்த த.வெ.க. தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருச்சூர் மாவட்டத்தில் த.வெ.க. முதல் ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலியில் மலையாள மொழி இணைக்கப்பட்டு, மாவட்ட அளவில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், வயநாடு மற்றும் பாலக்காடு பகுதிகளிலும் த.வெ.க. கூட்டங்கள் முன்னதாக நடத்தப்பட்டுள்ளன. கட்சியில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள சூழலில், த.வெ.க. தனது அரசியல் அடிப்படை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA