தெருநாய்கள் தொடர்பான உத்தரவில் திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி
புதுடெல்லி, 19 மே (ஹி.ச.) அண்மை காலமாக தெருநாய் தொந்தரவுகள் குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதில்,
தெருநாய்கள் தொடர்பான உத்தரவில் திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி


புதுடெல்லி, 19 மே (ஹி.ச.)

அண்மை காலமாக தெருநாய் தொந்தரவுகள் குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

அதில், பொது இடங்களில் பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி போட்ட பின்னர் அவற்றை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், பொது நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் சுற்றித்திரியும் நாய்களை முழுமையாக அகற்றவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், கருத்தடை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் அதே இடத்தில் விடுவதே விலங்குகள் நலச் சட்டத்தின்படி சரியான நடைமுறை. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றினால் அந்த பகுதியில் புதிய நாய்கள் வந்து பிரச்னை அதிகரிக்கும் என வாதிடப்பட்டது.

பொது வளாகங்களில் இருந்து நாய்களை முழுமையாக அகற்றும் உத்தரவையும் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, மனுதாரர்களின் வாதங்களை ஏற்க மறுத்துவிட்டது.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமே முக்கியம். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்த திருத்தமும் தேவையில்லை என கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

இதன் மூலம், பிடிக்கப்படும் தெருநாய்களை கருத்தடை செய்த பின் அவற்றை பழைய இடத்தில் விடக்கூடாது என்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளி, மருத்துவமனை போன்ற பொது வளாகங்களில் நாய்களை அகற்றும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியையும், பொதுமக்கள் தரப்பில் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b