செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, 19 மே (ஹி.ச.) தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி இளைஞர்களிடம் மோசடியாக வசூலிக்கப்பட்ட பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்ற விசாரணைய
அன்புமணி


சென்னை, 19 மே (ஹி.ச.)

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி இளைஞர்களிடம் மோசடியாக வசூலிக்கப்பட்ட பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுகவைச் சேர்ந்த தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, 2011–2015 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர், பொறியாளர் உள்ளிட்ட பணிகளை வழங்குவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் அடிப்படையில், மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 410 நாட்கள் சிறையில் இருந்தபோதிலும், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அரசின் அனுமதி அவசியம் என்பதாலும், முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்படாததாலும் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு மே 14-ஆம் தேதி அப்போதைய ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அமலாக்கத்துறை அனுமதி கோரியதாகவும், ஆனால் அரசிடம் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என கூறி அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக தலைமைச் செயலாளருக்கு உரிய ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பணம் பெற்றதை செந்தில் பாலாஜியே ஒப்புக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட சிலருக்கு பணத்தை திருப்பி வழங்கியதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இத்தகைய சூழலில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P