Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 மே (ஹி.ச.)
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய போதைக் கும்பலைக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் தொடரும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வசித்துவரும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு ஹாஜா முகைதீன் அவர்களின் இல்லத்திற்குள் புகுந்த போதைக் கும்பல் கொடூரமான முறையில் தாக்கியதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் போதைக் கும்பல் நள்ளிரவு நேரத்தில் செய்தியாளர் ஒருவரின் இல்லத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவிற்கான அசாதாரண சூழல் தவெக அரசின் மீது குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.
கடந்த ஐந்தாண்டுக்கால திமுக ஆட்சியின் போது, உண்மைச் செய்திகளைத் துணிச்சலுடன் வெளியிடும் செய்தி நிறுவனங்களை அச்சுறுத்துவது, ஆளுங்கட்சியினர் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் தவெக ஆட்சியிலும் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய போதைக் கும்பலைக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, செய்தியாளர்கள் தங்களின் பணியில் சுதந்திரமாக ஈடுபடுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
என்று அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b