Enter your Email Address to subscribe to our newsletters

வேளாங்கண்ணி, 02 மே (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடிகர் விஜய் அதிகாலை பிரார்த்தனையில் பங்கேற்கவுள்ளதாக பரவிய தகவல் காரணமாக, இன்று அதிகாலை அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர்.
நடிகர் விஜயை நேரில் காண வேண்டும் என்ற ஆவலில், வேளாங்கண்ணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலிருந்தும் ரசிகர்கள் பேராலய வளாகத்திற்கு வந்தனர்.
இதனால் பேராலயத்தின் நுழைவாயில் மற்றும் உள் பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போதிய அளவில் காவல்துறையினர் முன் கூட்டியே பணியில் அமர்த்தப்படாததால்,பேராலய வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
ரசிகர்கள் திரளாக ஒரே நேரத்தில் பேராலயத்திற்குள் நுழைய முயன்றதால்,அங்கு தள்ளு முள்ளு நிலையும் உருவானது.
இதையடுத்து, பேராலய நிர்வாகம் சார்பில் நடிகர் விஜய் இன்று பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவிய தகவல் உண்மையல்ல என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, விஜயை காண வந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திடீரென பரவிய வதந்தி காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் சில மணி நேரங்கள் பரபரப்பான சூழல் நிலவியது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P