பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி கொடுக்க டெல்லி அரசு கட்டுப்பாடுகள் விதிப்பு
புதுடெல்லி, 22 மே (ஹி.ச.) பக்ரீத் பண்டிகை (ஈத் அல்-அதா) என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தியாகத் திருநாள் ஆகும். 2026-ஆம் ஆண்டில், இந்தியாவில் இப்பண்டிகை மே 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது.
Delhi Government Imposes Restrictions on Offering Qurbani


புதுடெல்லி, 22 மே (ஹி.ச.)

பக்ரீத் பண்டிகை

(ஈத் அல்-அதா) என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தியாகத் திருநாள் ஆகும். 2026-ஆம் ஆண்டில், இந்தியாவில் இப்பண்டிகை மே 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது.

இப்பண்டிகை அன்று காலையில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, மசூதிகள் அல்லது திறந்தவெளி மைதானங்களில் ஒன்று கூடிச் சிறப்புப் பெருநாள் தொழுகை நடத்துவர்.

தகுதியுள்ள இஸ்லாமியர்கள் குர்பானி எனும் பெயரில் ஆடு, மாடு அல்லது ஒட்டகத்தை இறைவனின் பெயரால் பலியிடுவார்கள். குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சி மூன்று சம பங்குகளாகப் பிரித்து ஏழை எளிய மக்களுக்கு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தானமாக வழங்கப்படும்.

பக்ரீத் பண்டிகை மே 28-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சட்டவிரோத இறைச்சி வெட்டுதல் மற்றும் அனுமதியற்ற கால்நடை வா்த்தகம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக புதுடெல்லி வளா்ச்சித் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா கூறியதாவது:

கால்நடைகள் நலன் மற்றும் பொது சுகாதாரத்தை உறுதி செய்ய, பக்ரீத் பண்டிகையின்போது விலங்குகளை பலியிடுவது அனுமதிக்கப்பட்ட மற்றும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். மாடுகள், கன்றுகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மிருகங்களை வெட்டுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டு, அது கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

மேலும், சாலைகள், தெருக்கள் மற்றும் பொது இடங்களில் எந்தவித பலியிடும் செயல்களும் நடைபெறக்கூடாது. பொது இடங்களில் இறைச்சிகளை வாங்குவது மற்றும் விற்பது சட்டவிரோதம் என்பதால், புகாா்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விலங்குகளை வெட்டும்போது சாலைகள், வடிகால்கள் அல்லது கால்வாய்களில் இரத்தம் செல்லாதவாறு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மீதமுள்ள கழிவுகள் நிா்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளின்படி அகற்றப்பட வேண்டும்.

1960-ஆம் ஆண்டின் விலங்குகளுக்கு எதிரான கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ், சட்டவிரோத கால்நடைகள் கடத்தல் மற்றும் அனுமதியில்லாமல் வெட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்.

விலங்குகளை கொண்டு செல்லும் போது பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன் தொடா்பான விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி நிா்வாகத்துடன் இணைந்து பிரச்சினைக்குரிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

விலங்கு நல சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள், சமூக வலைதளங்கள் மற்றும் பிற தகவல் தொடா்பு தளங்கள் மூலம் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சா் தெரிவித்தாா்.

Hindusthan Samachar / vidya.b