‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் மிச்சமாகும் - நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் பி.பி. சௌத்ரி
புதுடெல்லி, 22 மே (ஹி.ச.) இந்தியாவில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது ''ஒரே நாடு, ஒரே தேர்தல்'' என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் தேர்தல் செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டு, அரசுக்கு ரூ.7 லட்சம் கோ
Over ₹7 lakh crore will be saved through ‘One Nation, One Election’


புதுடெல்லி, 22 மே (ஹி.ச.)

இந்தியாவில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் தேர்தல் செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டு, அரசுக்கு ரூ.7 லட்சம் கோடி வரை மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனப் பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவரும் பாஜக தலைவருமான பி.பி. சௌத்ரி,

இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஆட்சி முடக்கத்தை குறைக்கவும், பெரும் பொருளாதார இழப்புகளை தடுக்கவும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது அவசியம்.

காந்திநகர் மற்றும் அகமதாபாத்தில் கடந்த மூன்று நாட்களாக தேர்தல் சீர்திருத்தம் குறித்து நடைபெற்ற ஆலோசனைகள், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை, ‘விக்சித் பாரத்’ கட்டமைக்கும் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது.

அடிக்கடி தேர்தல் நடத்துவது கல்வி, சுகாதாரம், ஆட்சி நிர்வாகம் மற்றும் தொழில்துறை உற்பத்தி போன்ற துறைகளை பாதிக்கிறது.

குழந்தைகளின் கல்வி எந்த இடையூறும் இன்றி சரியாக நடைபெற வேண்டும், மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்புகளில் தடை ஏற்படக்கூடாது, உற்பத்தியில் தடை இருக்கக்கூடாது, ஆட்சி நிர்வாகத்தில் தடை இருக்கக்கூடாது என்பதே இதன் நோக்கம்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் நாட்டிற்கு ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் மிச்சமாகும்.

முன்னதாக, 20 ஆண்டுகளாக இதுவே நடைமுறையாக இருந்தது; 1967 வரை நான்கு பொதுத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. காங்கிரஸ் காலத்தில், 1967-68ல், ஏழு மாநில சட்டமன்றங்கள் அவற்றின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே முன்கூட்டியே கலைக்கப்பட்டன. பின்னர், குடியரசுத் தலைவர் ஆட்சி, அவசரநிலை மற்றும் நீட்டிப்புகள் காரணமாக, மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படத் தொடங்கின.

பொருளாதார இழப்பும் ஆட்சி நிர்வாக இழப்பும் மிகப்பெரியவை. எனவே, இன்று இந்த தேர்தல் சீர்திருத்தம் நாட்டிற்கு அவசரத் தேவையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b