Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 23 மே (ஹி.ச.)
கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 21.05.2026 மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மர்மமான முறையில் காணாமல் போனார்.
இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், அவரது பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரை இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நேற்று (22.05.2026) மாலை கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமியின் சடலமாக கிடப்பதாக சூலூர் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே சமயம் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, குற்றவாளிகளை விரைந்து பிடிக்கச் சிறப்புப் படைகளை அமைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்கக் கோரியும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் உறவினர்களும் பொதுமக்களும் திருச்சி சாலையில் சூலூர் காவல் நிலையம் முன்பாக நேற்று இரவு 9 மணியளவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
போலீசாரின் விசாரணையில் முதற்கட்டமாக 33 வயதான கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவரது நண்பரான மோகன்ராஜ் என்பவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோகன்ராஜையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b