மரச்சாமான்கள் சந்தையில் ஏற்பட்ட தீ விபத்து - தீயணைப்பு வாகனங்கள் மீது உள்ளூர் மக்கள் கல்வீச்சு
புதுடெல்லி, 23 மே (ஹி.ச.) டெல்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் இருந்த சந்தை பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மரச்சாமான்கள் எளிதில் தீப்பற்றக்கூடிதாக இருந்தால் தீ வேகமாகப் பரவ
Fire Accident at Furniture Market


புதுடெல்லி, 23 மே (ஹி.ச.)

டெல்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் பிளைவுட் மற்றும் மரச்சாமான்கள் இருந்த சந்தை பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மரச்சாமான்கள் எளிதில் தீப்பற்றக்கூடிதாக இருந்தால் தீ வேகமாகப் பரவி பயங்கரமாக எரிய தொடங்கியுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து நிலைமையைக் கட்டுப்படுத்த பல தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டன.

துணை தலைமை தீயணைப்பு அதிகாரி டி.பி. முகர்ஜி, டெல்லி தீயணைப்புச் சேவைக்கு இரவு 11:57 மணிக்கு தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகர்ஜி,

தீ கட்டுப்பாட்டு அறைக்கு 11:57 மணிக்கு தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தது. ஆரம்பத்தில் வழக்கமான எண்ணிக்கையிலான வாகனங்கள் அனுப்பப்பட்டன.

ஆனால், இது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகம் உள்ள சந்தை என்பதால், பின்னர் இது ‘பெரிய’ தீ விபத்தாக அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக ‘நடுத்தர’ பிரிவு தீ விபத்தாக வகைப்படுத்தப்பட்டது.

தீ மிகப்பெரிய பரப்பளவில் பரவியது, சந்தையும் மிகவும் விரிவானது. இங்கு முக்கியமாக மரச்சாமான்கள், பிளைவுட் மற்றும் அது தொடர்பான பொருட்களின் வர்த்தகம் நடைபெறுகிறது. இதுவரை மொத்தம் சுமார் 25 முதல் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன. தற்போது தீ கட்டுக்குள் உள்ளது. இதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த குறிப்பிட்ட தகவலும் கிடைக்கவில்லை. விசாரணை டெல்லி காவல்துறையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், சரியான காரணத்தை அவர்கள்தான் கண்டறிவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆரம்ப கட்ட நடவடிக்கையின்போது இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மட்டுமே வந்ததைக் கண்டு உள்ளூர் மக்கள் ஆத்திரமடைந்து வாகனங்கள் மீது கற்களை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் குறைந்த அளவிலான தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் விரக்தி அடைந்த பொதுமக்கள் தீயணைப்பு வாகனங்கள் மீது தாக்குதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஆனால் அதன் பின்னர் அதிக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுவரை எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், தடய அறிவியல் ஆய்வக (FSL) குழு சம்பவ இடத்திற்கு வந்து, பகுதியை ஆய்வு செய்து சேதத்தை மதிப்பிட்டு வருகின்றது.

Hindusthan Samachar / vidya.b