கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர மே 25 முதல் ஜூன் 17-ஆம் தேதி விண்ணப்பிக்க வாய்ப்பு
சென்னை, 23 மே (ஹி.ச.) தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இக்க
admission to veterinary courses from May 25


சென்னை, 23 மே (ஹி.ச.)

தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இக்கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வரும் திங்கள்கிழமை (மே 25) தொடங்குகிறது.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு இந்தக் கல்லூரிகளில் பிவிஎஸ்சி ஏஹெச் 660 இடங்கள் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 20 இடங்கள் இருக்கின்றன.

இதேபோக, ஒசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பி.டெக். படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.

இந்நிலையில், பிவிஎஸ்சி ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் திங்கள்கிழமை (மே 25) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஜூன் 17-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி-ஏ.ஹெச். மற்றும் பி.டெக். படிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

Hindusthan Samachar / vidya.b