ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தனர்
சென்னை, 25 மே (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான அணி என அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதற்கிடைய
AIADMK MLAs who resigned have joined the TVK.


சென்னை, 25 மே (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தல் முடிவைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான அணி என அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

இதற்கிடையே, முதல்வர் விஜய்யின் த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏக்களின் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து வருகிறார்.

அதே சமயம், திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைக்க முயற்சித்தார் என்றும் அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் சி.வி.சண்முகம் மற்றும் அவரது தரப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இதனால் அதிமுகவில் கடந்த சில தினங்களாக உட்கட்சி பிரச்சனை நீடித்துக் கொண்டே வருகிறது.

இந்த சூழலில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் இன்று

(25-05-26) எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்துப் பேசியுள்ளனர்.

அதாவது எஸ்.பி வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்களான ஆற்காடு எம்.எல்.ஏ சுகுமார், அந்தியூர் எம்.எல்.ஏ ஹரிபாஸ்கர், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ திலீபன் ஜெய்சங்கர் ஆகியோர் இன்று சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதனால், எஸ்.பி வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறி எடப்பாடி பழனிசாமியுடன் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பலம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளனர். தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளனர்.

ராஜினாமா செய்த கையோடு, 3 எம்.எல்.ஏக்களும் தலைமைச் செயலகத்திலேயே பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து தவெகவில் இணைந்துள்ளனர். அதிமுகவில் 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதிமுகவின் எம்.எல்.ஏக்களின் பலம் 47இல் இருந்து 44ஆக குறைந்துள்ளது.

அதே போல், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக நின்ற 25 எம்.எல்.ஏக்களின் 5 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவருடன் இணைந்ததாகக் கூறப்படும் நிலையில், 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.

இதன் மூலம் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏக்களே உள்ளனர். 3இல் 2 பங்கு இல்லாததால் எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தாவல் சட்டம் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்து 20 நாட்களே ஆன நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b