Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 25 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற டிஎஸ்சி ஆசிரியர் நியமனத் தேர்வு தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையான குற்றச்சாட்டுகளை தனது அறிக்கையில் முன்வைத்துள்ளார்.
அதில்,முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு மெகா டிஎஸ்சியா அல்லது வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை ஏமாற்றிய டிஎஸ்சியா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
தேர்வில் கேள்வித்தாள் கசிவு, தரவு நீக்கம், திறமைப்பட்டியல் மறைப்பு போன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சர் லோகேஷ் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தேர்வு செயல்முறையில் ஈடுபட்ட எஸ்.சி.இ.ஆர்.டி அவுட்சோர்சிங் ஊழியர் ஒருவர் முதலிடம் பெற்றது சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும், பின்னர் அந்த விவரங்கள் தரவுத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
திறமைப்பட்டியல் பொதுமக்களுக்கு வெளியிடப்படாமல், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் தகவல் அனுப்பப்பட்டதும் சந்தேகத்தை அதிகரிக்கிறது என தெரிவித்தார்.
‘விளையாட்டு ஒதுக்கீடு’ பணியிடங்கள் ஒவ்வொன்றும் ரூ.15 லட்சத்திற்கு விற்கப்பட்டதாகவும், போலி சான்றிதழ்கள் மூலம் தகுதி இல்லாதவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இது ஒரு நியாயமான நியமன செயல்முறை அல்ல, “வெளிப்படையான ஊழல்” என அவர் விமர்சித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், தகுதியானவர்களுக்கு நீதி வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி
கோரிக்கை வைத்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA