Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 மே (ஹி.ச)
தமிழ்நாடு முழுவதும் மணல் மற்றும் ஜல்லி விற்பனைக்காக ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
இயற்கை வளங்கள் தொடர்புடைய இடங்களில் திடீர் சோதனைகள் நடத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மணல்
(M Sand, P Sand), ஜல்லி உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைத்து சில்லறை விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் அவற்றை டிராக்டர், டிப்பர் லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லும் விற்பனையாளர்கள் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் பிடிபட்டால், சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள மணல் மற்றும் ஜல்லி விற்பனையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கே மணல் மற்றும் ஜல்லி ஏற்றிச் செல்ல வேண்டும். மேலும், வாகன அனுமதி சீட்டு, ஜல்லிக்கான GST பில், போக்குவரத்து அனுமதி சீட்டு மற்றும் மின்னணு ரசீது ஆகிய ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இல்லையெனில், சம்பந்தப்பட்ட வாகனம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ