Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 25 மே (ஹி.ச..)
கூகட்பள்ளி தொகுதியில் நடைபெற்ற பி.ஆர்.எஸ். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ராமா ராவ் (கே.டி.ஆர்) கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
கூட்டத்தில் வாக்காளர் சிறப்பு ஒருங்கிணைந்த திருத்தம் (SIR) தொடர்பாக விரிவான விளக்கவுரை வழங்கிய அவர், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் போலி மற்றும் டூப்ளிகேட் வாக்குகளை பதிவு செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
இதுபோன்ற செயல்களில் இருந்து எச்சரிக்கையாக இருந்து, ஒரு வாக்காளரையும் இழக்காமல் தரை மட்டத்தில் உறுதியாக செயல்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் பேசிய அவர்,
பி.ஆர்.எஸ். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் நகரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 24 மணி நேரமும் தொடர்ந்து குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
கடந்த காலத்தில் தெலங்கானா மாநிலத்திற்கு 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கிய சாதனை சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்) அவர்களுக்கே சொந்தமானது என்றும், அதேபோல் நகரத்திற்கு தொடர்ந்து குடிநீர் வழங்கும் திட்டமும் அவரால் மட்டுமே செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், கடந்த தேர்தலில் நகர மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தையும் வழங்கவில்லை என கூறிய அவர், பி.ஆர்.எஸ். ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பறக்கும் மேம்பாலங்கள், மருத்துவமனைகள் மற்றும் அரசு கட்டிடங்களை தற்போது காங்கிரஸ் தலைவர்கள் தாங்களே கட்டியதாக கூறி திறந்து வைப்பதாக குற்றம் சாட்டினார்.
இறுதியாக, கடந்த காலத்தில் வளர்ச்சிக்கே முன்னுரிமை அளித்தோம் என்றும், இனி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்சிக்காக உழைத்த ஒவ்வொரு தொண்டருக்கும் உரிய மரியாதை மற்றும் முக்கியத்துவம் வழங்கப்படும் என கே.டி.ஆர் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA