Enter your Email Address to subscribe to our newsletters

கம்மம் , 25 மே (ஹி.ச.)
தெலங்கானாவில் நெல் கொள்முதல் தாமதமாக நடைபெறுவதற்கு மத்திய அரசின் கொள்கைகளே காரணம் என மாநில வேளாண்மை அமைச்சர் தும்மல நாகேஸ்வரராவ் குற்றம்சாட்டினார்.
கம்மம் மாவட்டத்தில் உள்ள யாதாலகுண்டா சுரங்கப்பாதை (டன்னல்) பணிகளை இன்று ஆய்வு செய்த அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர்,
நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
நாட்டில் அனைத்து வகை பயிர்களையும் அரசு நேரடியாக கொள்முதல் செய்யும் ஒரே மாநிலம் தெலங்கானாதான் என அவர் தெரிவித்தார்.
மேற்காசியப் போரின் தாக்கம் காரணமாக கன்னி மூட்டைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், டீசல் பற்றாக்குறையால் நெல் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் கூறினார்.
இதுபோன்ற சூழ்நிலையிலும் பாஜக தலைவர்கள் பேருந்து யாத்திரை நடத்துவது சரியல்ல என அவர் விமர்சித்தார்.
மாநிலத்தில் இதுவரை 12 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடைசி தானியம்வரை வாங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
பாசனத் திட்டங்கள் வேகமாக முன்னேற்றம்
பாசனத் திட்டங்கள் குறித்து அவர் கூறுகையில், கம்மம் மாவட்டத்திற்கு கோதாவரி நீரை கொண்டு வருவது தனது வாழ்நாள் இலட்சியம் என தெரிவித்தார்.
முந்தைய ஆட்சியில் யாதாலகுண்டா டன்னல் பணிகள் முன்னேறவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தற்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி அனுமதியுடன் ராஜீவ் லிங்க் கால்வாய் மற்றும் யாதாலகுண்டா டன்னல் பணிகள் வேகமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 15 மாதங்களில் 2 கிலோமீட்டர் நீளமுள்ள டன்னல் கட்டுமானம் முடிவடைந்தது முக்கிய சாதனை என்றும் கூறினார்.
ஆகஸ்ட் 15க்குள் லைனிங் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், சாகர் மற்றும் சீதாராம பாசனப் பகுதிகளுடன் இணைந்து கிருஷ்ணா–கோதாவரி நதிநீர் கிடைப்பதால் கம்மம் மாவட்டம் விரைவில் பசுமை வளம் மிக்க பகுதியாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA