Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச)
தமிழ்நாடு முதலமைச்சரின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு உழவர்களுக்கு பயனளிக்காது, அதனை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், சிறு - குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் கடன் தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடியும் செய்யப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை வழங்கினார்.
அதே நேரத்தில், கடன் தள்ளுபடியை மத்திய அரசு தடுத்தால் எங்களால் அதை செய்ய முடியாது என திமுக கைவிரித்தது. எனவே, தவெக-வுக்கு ஆதரவாக விவசாயிகள் பலரும் வாக்களித்தனர்.
ஆகையால், புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், தன் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்றி, நிதிசுமையை காரணம்காட்டி விவசாயிகளுக்கு பயனளிக்காத கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதுமாதிரியான அறிவிப்புகள், கடன்சுமையில் இருக்கும் விவசாயிகளை காப்பாற்ற உதவாது. மாநில அரசுகள், தங்களது நிதியிலிருந்து செயல்படுத்தும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்பதை முதலமைச்சர் விஜய் அறிய வேண்டும். கடந்த காலங்களைப் பின்பற்றி கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்திட வேண்டும்.
நடப்பாண்டுக்கான புதிய கடன் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொண்டு கடன் தள்ளுபடி நடவடிக்கையை தொடர வேண்டும். அதுவரையிலும் தற்போதைய அறிவிப்பை நிறுத்தி வைத்து, மறுபரிசீலினை செய்ய முதலமைச்சர் விஜய் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN