கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
சென்னை, 27 மே (ஹி.ச) கேரளம் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. கொச்சி கனிமவள மோசடி வழக்கில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில்
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்


சென்னை, 27 மே (ஹி.ச)

கேரளம் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது. கொச்சி கனிமவள மோசடி வழக்கில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ’கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சிஎம்ஆர்எல்)’ நிறுவனம், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு சொந்தமான நிறுவனத்திற்குக் கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் 1.72 கோடி சட்டவிரோதமாக வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது சம்பந்தமாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி சிஎம்ஆர்எல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவைக் கேரள உயர்நீதி மன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று கேரளம் முழுவதும் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இதில், திருவனந்தபுரம் மற்றும் கண்ணூரில் உள்ள பினராயி விஜயனின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு 2024 ஆண்டு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்துவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை (Enforcement Directorate) நடத்திய சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய முகமைகள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவது குறித்த தீவிரமான கவலைகளை, இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை எழுப்புகின்றன.

தற்செயலாக, பினராயி விஜயன் ஏன் இன்னும் பாஜக-வின் தாக்குதலுக்கு ஆளாகவில்லை? என்று மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி வந்த சில காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் பொருளற்றவை என்பதையும் இந்த ரெய்டுகள் அம்பலப்படுத்தியுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b