Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 27 மே (ஹி.ச)
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் விஐபி சாலையில் 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 70 அடி உயர தனது சிலையை அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கால்பந்து வீரருக்காக அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிலைகளில் ஒன்றாக இது அறியப்படுகிறது.
தெற்கு தம் தம்மில் உள்ள லேக் டவுனில் ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப் அமைத்த இந்த 70 அடி இரும்புச் சிலை, 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவுடன் மெஸ்ஸி பெற்ற வரலாற்று வெற்றியைக் குறிக்கும் வகையில், ஃபிஃபா உலகக் கோப்பையை ஏந்தியபடி உள்ளது.
இந்த நிலையில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் சிலை, காற்றில் ஆடுவதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து இன்று கயிறுகளால் கட்டி பாதுகாக்கப்பட்டது.
பொதுமக்களின் அச்சம் காரணமாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். சிலையின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பை மதிப்பிட அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
மாறிவரும் வானிலை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பிரம்மாண்டமான இந்த சிலை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் கூறுகையில்,
மெஸ்ஸி சிலை காற்றில் ஆடுவதாக வந்த தகவலையடுத்து பார்வையிட வந்தோம். இதுகுறித்து மேலதிகாரிகள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுவார்கள். நாங்கள் ஆய்வுக்காக வந்துள்ளோம் என்றனர்.
சிலையின் நீண்டகால உறுதித்தன்மையை உறுதி செய்ய கூடுதல் வலுவூட்டல்கள் அல்லது மாற்றங்கள் தேவையா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b