Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 27 மே (ஹி.ச.)
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் குப்பைக்கிடங்கானது 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன.
இங்கு மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மாசுபாடு, சுவாசக்கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு, இங்குள்ள மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.
நீண்டகாலமாகவே இந்த குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டதுடன், அரசுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தனர். மேலும் இங்கு பயோ மைனிங் திட்டத்தின் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தாலும் மீண்டும் மீண்டும் குப்பைகள் குவிந்த வண்ணமே உள்ளன.
எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், குப்பைக்கிடங்கை முற்றிலுமாக இங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்களும் குடியிருப்பு வாசிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருவெறும்பூர் எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி, அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, “பயோ மைனிங் திட்டத்தின் மூலம் 40 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு குப்பைகளை அகற்றுவதற்கு பதிலாக, துவாக்குடி பகுதியில் கைவிடப்பட்ட 1000 அடி ஆழமுள்ள குவாரிகளில் (பாறை குழிகளில்) குப்பைகளை கொட்டி நிரப்பலாம்.
மேலும் இதன்மூலம் குவாரிகளும் மூடப்படும், குப்பைகளும் குப்பைக்கிடங்கில் தேங்காமல் இருக்கும். குப்பைகளை நேரடியாக குவாரியில் கொட்டுவதால் 30 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும்.
இதற்கு மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Hindusthan Samachar / ANANDHAN