அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன் திமுகவில் இணைந்தார்
சென்னை, 28 மே (ஹி.ச) அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன், தனது ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.
Former AIADMK MLA Venkatraman joins DMK.


சென்னை, 28 மே (ஹி.ச)

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கட்ராமன், தனது ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெங்கட்ராமன் வெற்றி பெற்றார்.

தேமுதிக எம்எல்ஏவாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததை அடுத்து காலியான ஆலந்தூர் தொகுதியில் அவர் களமிறங்கி வெற்றியைப் பதிவு செய்தார்.

இதற்கு முன்னர் சென்னை புறநகர் மாவட்ட அதிமுக உரிமை மீட்புக்குழு செயலாளராக வெங்கட்ராமன் செயல்பட்டு வந்தார்.

கடந்த காலங்களில் எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் திமுகவில் இணைந்து அமைச்சர், மாவட்டச் செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.

இன்றைய நிகழ்வில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வெங்கட்ராமனின் இணைவு, தென்சென்னை பகுதியில் திமுகவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b