17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு வழக்கு - விசாரணையை தொடங்கியது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை
புதுடெல்லி, 28 மே (ஹி.ச) தென்கிழக்கு டெல்லியின் அமர் காலனி பகுதியில் கடந்த 26 ஆம் தேதி மாலை உள்ளூர் உணவகம் ஒன்றில் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. உணவகத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்கள் சிறுவனை நோக்கி து
17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு வழக்கு - விசாரணையை தொடங்கியது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை


புதுடெல்லி, 28 மே (ஹி.ச)

தென்கிழக்கு டெல்லியின் அமர் காலனி பகுதியில் கடந்த 26 ஆம் தேதி மாலை உள்ளூர் உணவகம் ஒன்றில் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. உணவகத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்கள் சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட சிறுவன் எய்ம்ஸ் அதிர்ச்சி சிகிச்சை மையத்தில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

காவல்துறை அதிகாரிகளின் தகவலின்படி, துப்பாக்கிச்சூடு குறித்து அமர் காலனி காவல் நிலையத்திற்கு இரவு 7:54 மணியளவில் பிசிஆர் அழைப்பு வந்தது.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுவன் ஒரு பெண் தோழியுடன் உணவகத்தில் அமர்ந்திருந்தபோது, அவ்வழியாகச் சென்ற இளைஞர்கள் குழுவில் ஒருவன் சிறுவனின் நாற்காலியைத் தொட்டதாகத் தெரியவந்தது. சிறுவன் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவே, அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. சுமார் 4-5 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பிய அந்த கும்பலில் இருந்த ஒருவன், சிறுவனை நோக்கி ஒருமுறை சுட்டுவிட்டு தப்பியோடினான்.

குற்றப்பிரிவு குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளன. குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பல காவல் குழுக்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், தொழில்நுட்ப கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளன.

இது தொடர்பாக, நேற்று ஒரு குற்றவாளியை டெல்லி காவல்துறை கைது செய்தது. சம்பவத்தின்போது குற்றவாளிகள் மதுபோதையில் இருந்ததாகவும், அவர்களில் ஒருவன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட நபர் சிறுவன் என்றாலும், அவன் முக்கிய துப்பாக்கிச்சூடு நடத்தியவன் அல்ல என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, அமர் காலனி துப்பாக்கிச்சூடு வழக்கின் விசாரணையை இன்று தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டது.

மேலும் விவரங்களைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b