புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கத் தடையீடு நீக்கம் – அன்புமணி இராமதாஸ்
சென்னை, 03 மே (ஹி.ச.) புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியது தமிழ்நாட்டிற்கு முக்கிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
Anbumani


சென்னை, 03 மே (ஹி.ச.)

புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியது தமிழ்நாட்டிற்கு முக்கிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பதற்கும் தடையாக இருந்த விதியை தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சம் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு காரணமாக, தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும், இடங்களை அதிகரிக்கவும் சிக்கல் இருந்தது. மாநிலத்தில் ஏற்கனவே 12,650 இடங்கள் உள்ள நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் 7,731 இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்தது.

இந்த விதிக்கு எதிராக பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்ததுடன், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் கடிதம் எழுதியதாக அன்புமணி கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த விதி முதலில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது முழுமையாக கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புதிய அறிவிப்பின் மூலம், தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் தேவையான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியும்.

குறிப்பாக, இதுவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு வழி திறந்துள்ளது.

மேலும், தற்போது 100 இடங்களுடன் செயல்படும் 16 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 150 இடங்களுடன் இயங்கும் 15 கல்லூரிகளிலும் தலா 50 இடங்கள் அதிகரிக்கப்பட்டால், மொத்தமாக 1,550 மாணவர்கள் கூடுதலாக மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்பது பா.ம.க.வின் நோக்கம் எனக் கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் 13 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும் நினைவூட்டினார்.

ஆனால், தற்போதைய மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இதுவரை ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை என விமர்சித்தார்.

2025ஆம் ஆண்டுக்கு முன்பே இந்த வாய்ப்பு இருந்தும் நடவடிக்கை எடுக்காதது மக்கள் நலனில் அக்கறை இல்லாததைக் காட்டுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், தடைகள் நீக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என்றும், மக்கள் நலனில் அக்கறை கொண்ட புதிய அரசு அமைந்தவுடன் இதற்கான நடவடிக்கையை பா.ம.க மேற்கொள்ளும் என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ