மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி கும்பாபிஷேகம் - முதற்கட்ட பணிகள் தொடக்கம்
மதுரை, 03 மே (ஹி.ச) உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் கும்பாபிஷே
Consecration Ceremony at Madurai Meenakshi Amman Temple


மதுரை, 03 மே (ஹி.ச)

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

இக்கோவிலில் கும்பாபிஷேகம் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுரத்தில் வர்ணம் பூசும் பணி மற்றும் வெளிபுரத்தில் உள்ள பணிகள் அனைத்தும் நிறைவுப்பெற்றது.

எனவே கோவிலில் உள்ள உப சன்னதியில் சீரமைப்பு பணிகளை தொடங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதியை தவிர கோவிலில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பரிவாரதெய்வங்களுக்கான பாலாலய பூஜை நாளை (மே 4) நடைபெறவுள்ளது.

இதில் நடராஜர், துர்க்கை, லட்சுமி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பரிவாரதெய்வங்களை சித்திரமாக வரைந்து, அதில் அந்த தெய்வங்களை உருவேற்றுவார்கள். அதன்பின்னர் பரிவார தெய்வங்கள் உள்ள சன்னதிகளில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். பாலாலய பூஜைக்கான யாகசாலை பூஜைகள் ஸ்தானிக பட்டர்கள் ஹலாஸ், செந்தில் பட்டர் தலைமையில் நேற்று தொடங்கியது.

இந்நிலையில் நாளை காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்கள் புறப்பாடு நடந்து, 9.30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கான பாலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணிகள் நடந்து வருகின்றன.

Hindusthan Samachar / vidya.b