Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 03 மே (ஹி.ச.)
நிதி ஆயோக் என்பது மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் உயர்மட்ட அமைப்பாகும்.
இதில் முழுநேர உறுப்பினர்கள் பொருளாதாரம், வளர்ச்சி, சமூகநலன் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் அரசுக்கு ஆலோசனை வழங்குவர்.
மத்திய அரசின் முக்கிய கொள்கை சிந்தனைக் குழுவான நிதி ஆயோக்கின் முழுநேர உறுப்பினர்களாக டாக்டர் ஆர். பாலசுப்ரமணியம் மற்றும் டாக்டர் ஜோரம் அனியா நியமிக்கப்பட்டுள்ளனர்.
டாக்டர் ஆர். பாலசுப்ரமணியம் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுச் சுகாதாரத் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர்.
டாக்டர் ஜோரம் அனியா வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாடு மற்றும் சமூகக் கொள்கைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
இவர்களின் நியமனம், பகுதி சார்ந்த பிரதிநிதித்துவம் மற்றும் துறைசார் நிபுணத்துவம் ஆகிய இரண்டையும் நிதி ஆயோக்கில் வலுப்படுத்தும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தள பதிவு ஒன்றை வெளியிட்ட பிரதமர் கூறியிருப்பதாவது,
நிதி ஆயோக்கின் முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆர். பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், டாக்டர் ஜோரம் அனியா அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
பல்வேறு விவகாரங்கள் குறித்த அவர்களின் செழுமையான அனுபவமும் ஆழ்ந்த புரிதலும், கொள்கை உருவாக்கச் செயல்முறையை வெகுவாக வலுப்படுத்தும். பல்வேறு துறைகள் முழுவதும் புதுமையாக்கத்தையும் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல, இவர்களின் பங்களிப்புகள் துணை நிற்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
அவர்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் தாக்கமிக்க ஒரு பதவிக்காலம் அமைய எனது நல்வாழ்த்துகள்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவைச் செயலகம் வெளியிட்ட அரசிதழ் அறிவிக்கையின் மூலம் டாக்டர் பாலசுப்ரமணியம் மற்றும் டாக்டர் அனியா ஆகியோரின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இருவரும் கள அனுபவம் மிக்கவர்கள் என்பதால், கொள்கை உருவாக்கத்தில் நடைமுறை சார்ந்த அணுகுமுறை வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b