Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், கடந்த 25 நாட்களாக முறையாக இயங்காததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதன் விளைவாக, கொள்முதலுக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் வயல்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை அரசு கொள்முதல் நிலையத்தில் ஒப்படைக்க கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர்.
ஆனால், 25 நாட்களாகவும் அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்யாததால், அவை திறந்த வெளியில் குவியலாகவே கிடந்தன.
இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால் சுமார் 5,000 நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பல நாட்களாக வெயிலில் காய்ந்தும், தற்போது மழையில் முழுமையாக நனைந்தும் நெல்மணிகள் தரம் இழந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
நெல் கொள்முதல் பணிகள் தினசரி முறையாக நடைபெறாததே இந்த இழப்புக்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதிகாரிகளின் அலட்சியமான அணுகுமுறையால் தான் தங்களது விளைபொருட்கள் மழையில் நாசமாகியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்யுமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்த போதும்,
சாக்குகள் இல்லை, லாரிகள் வரவில்லை, பணியாளர்கள் இல்லை என காரணங்கள் கூறி அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு, சோழவந்தான் பேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்மணிகளை விரைவாக கொள்முதல் செய்து, விவசாயிகளின் இழப்பைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam