Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 03 மே (ஹி.ச.)
உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் சூரிய உதயத்தை கண்டு ரசிக்க காத்திருந்தனர்.
இன்று காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய உதயத்தை காணமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
அதே போல் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் கூட்டம் அதிகரித்தது. நீண்ட வரிசையில் நின்ற சுற்றுலா பயணிகள் காலை 8 மணிக்கு படகு சேவை தொடங்கியதும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்துக்கு சென்று சுற்றிபார்த்தனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் அங்குள்ள பல்வேறு கடைகளில் விற்பனை களைகட்டியது.
கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b