ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் பரிந்துரைக்கு மத்தியில் அமெரிக்க - ஈரான் பதற்றம் அதிகரிப்பு
நியூயார்க், 03 மே (ஹி.ச) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான ஒரு சாத்தியமான ஒப்பந்தம் குறித்து தனக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், அதன் துல்லியமான விவரங்களுக்காக காத்திருப்பதாகவும், தெஹ்ரான் இணங்காவிட்டால் ராண
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் பரிந்துரைக்கு  மத்தியில் அமெரிக்க - ஈரான் பதற்றம் அதிகரிப்பு


நியூயார்க், 03 மே (ஹி.ச)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான ஒரு சாத்தியமான ஒப்பந்தம் குறித்து தனக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், அதன் துல்லியமான விவரங்களுக்காக காத்திருப்பதாகவும், தெஹ்ரான் இணங்காவிட்டால் ராணுவத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் எச்சரித்தார்.

இது குறித்து ஈரானிய அதிகாரி ஒருவர் வெளியிட்ட தகவலின்படி,

டிரம்ப் இதுவரை ஏற்காத ஈரானின் பரிந்துரை, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், அமெரிக்க முற்றுகையை நீக்கவும் வழிவகுக்கும். அதேசமயம் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மியாமிக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பரிந்துரையின் கருத்து குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதை டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

ஆனால் அதை ஏற்பது குறித்து சந்தேகம் தெரிவித்தார். தனது செயல்களுக்கு ஈரான் போதிய விளைவுகளைச் சந்திக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு உறுதியான பதிலளிக்காத டிரம்ப், ஈரான் தவறாக நடந்தால், ராணுவ நடவடிக்கை ஒரு வாய்ப்பாகவே உள்ளது என்று வலியுறுத்தினார்.

பரிந்துரைக்கப்பட்ட ஒப்பந்தத்தில், பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது உள்ளிட்டவை அடங்கும்.

இதற்கிடையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் குண்டுவீச்சு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளன. எனினும், ஒரு விரிவான ஒப்பந்தத்தை எட்டுவதில் சவால்கள் நீடிக்கின்றன.

ஈரான் கப்பல் போக்குவரத்து வழிகளை சீர்குலைத்துள்ளதாலும், தெஹ்ரானுக்கு எதிராக அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்வதாலும், உலக எரிசக்தி சந்தை தொடர்ந்து பதற்றமான நிலையில் உள்ளது.

Hindusthan Samachar / vidya.b