Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 03 மே (ஹி.ச.)
கோயம்புத்தூர் அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், 34 வயதுடைய இளைஞர் ஒருவர் 6 மலைகளை வெற்றிகரமாக கடந்த பின்னர், 7வது மலையை ஏற முயன்றபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவபெருமானின் திருத்தலமாக போற்றப்படும் வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பௌர்ணமி தினத்தையொட்டி பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.
அப்போது, சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மலையேறிய 34 வயது இளைஞர் ஒருவர், ஆறு மலைகளைக் கடந்துவிட்டு ஏழாவது மலையை நோக்கி ஏறிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் அவரை மீட்டு கீழிறக்க முயன்றனர். எனினும், அவர் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் மலையேற்றப் பாதையில் இருந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
தகவலறிந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு மேலான விசாரணை மேற்கொண்டனர்.
வெள்ளியங்கிரி மலையேற்றம் கடினமானதாக இருப்பதால், பக்தர்கள் தங்களது உடல்நிலையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கைகளுடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam