Enter your Email Address to subscribe to our newsletters

மகாராஷ்டிரா, 30 மே (ஹி.ச)
மகாராஷ்டிராவில் கள்ளச்சாராயம் அருந்தியதால் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தபோடி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் உட்பட 5 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புனே நகர காவல் மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் காவல் எல்லைகளில் இச்சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் காவல் ஆணையர் வினய் குமார் சௌபே இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.
இது தொடர்பாக இன்று பிம்ப்ரி உதவி காவல் ஆணையர் சச்சின் ஹிரே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நேற்று தபோடியில் போலி மதுபானம் குடித்து பலர் உயிரிழந்தனர். மரணம் விளைவிக்கும் குற்றம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.
இதுவரை 5 குற்றவாளிகளைப் பிடித்துள்ளோம், அவர்களில் இருவரை முறைப்படி கைது செய்துள்ளோம். விநியோக வலையமைப்பு எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது. முறைப்படி கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வான்கடே. அவர் இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார். மற்றொருவர் பிரஜாபதி. அவர் புனேயில் இருந்து மதுபானத்தை விநியோகித்ததோடு உயிர்க்கொல்லி கலவையைத் தயாரித்துள்ளார்.
அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். முழு விநியோக வலையமைப்பையும் கண்டறிவோம். மாதிரிகளைச் சேகரித்துள்ளோம், அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கள்ளச்சாராய சர்ச்சை, காவல்துறை மற்றும் மாநில கலால் துறையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
தடயவியல் துறை கலப்பட மதுபானத்தின் பகுப்பாய்வை முடித்து, அதன் அறிக்கையை தபோடி காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளது.
முதற்கட்ட ஆய்வு முடிவுகள், மதுபானத்தில் ரசாயன மற்றும் நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b