தென்காசி, நெல்லையில் அரிவாள் வெட்டு தாக்குதலில் 8 பேர் படுகாயம் - 4 பேர் கைது
திருநெல்வேலி, 30 மே (ஹி.ச.) தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் நேற்று முன் தினம் (28.05.2026) நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே திடீர் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதத்தின்
தென்காசி, நெல்லையில்  அரிவாள் வெட்டு தாக்குதலில் 8 பேர் படுகாயம் - 4 பேர் கைது


திருநெல்வேலி, 30 மே (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் நேற்று முன் தினம் (28.05.2026) நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே திடீர் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த முன்விரோதத்தின் தொடர்ச்சியாக, நேற்று (29.05.2026) மாலை இரண்டு சக்கர வாகனங்களில் வந்த சுமார் 9 பேர் கொண்ட முகமூடி அணிந்த மர்ம கும்பல், சாலையில் சென்றவர்கள் மற்றும் கடைகளில் இருந்த பொதுமக்களைக் குறிவைத்து அரிவாளால் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியது.

இந்த கொடூரத் தாக்குதலில் 6 இளைஞர்கள் கடுமையான வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர். மேலும் அந்த கும்பல் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாகக் கூறி நெட்டூர் கிராம மக்கள், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கிராமத்தில் மீண்டும் வன்முறை வெடிக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்துத் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீசார், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றினர். அதில் பதிவாகியுள்ள உருவங்களின் அடிப்படையில் அரிவாள் வெட்டில் ஈடுபட்ட 9 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் நெல்லை அருகே மானூரை அடுத்த தெற்குப்பட்டி கிராமத்தில் நேற்று மாலையில் சுமார் 3 மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் அதிவேகமாக கையில் அரிவாளுடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சிலர், ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று கேட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த கும்பல் தெற்குப்பட்டியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 35), முபாரக் (30) ஆகியோரை அரிவாளின் பின் பகுதியால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்தவர்கள் இருவரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளின் அடிப்படையில் 4 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் நெட்டூரில் ஒரு கும்பல் 6 பேரை வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.

எனவே இவர்கள் அந்த கும்பலை சேர்ந்தவர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Hindusthan Samachar / vidya.b