Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மே (ஹி.ச.)
வறட்சியான சூழ்நிலையிலும் மிகச்சிறப்பாக வளரக்கூடிய ஒரு மருத்துவ மூலிகைத் தாவரமான கற்றாழை மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவுத் தயாரிப்பில் கற்றாழையின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளது.
இதனால், வணிக ரீதியாக கற்றாழை சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு ஒரு சிறந்த லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. இப்பயிர் சாகுபடிக்கு தண்ணீர் தேங்காத மணல் கலந்த செம்மண் அல்லது இருமண்பாடு நிலங்கள் மிகவும் ஏற்றவை. களிமண் நிலங்களைத் தவிர்ப்பது நல்லது.
மண்ணின் pH அளவு 7.0 முதல் 8.5 வரை இருக்க வேண்டும். வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகள் சாகுபடிக்கு உகந்தவை. இதற்கு அதிக பனிப்பொழிவு ஆகாது.
பயிரிடும் முறை:
நிலத்தை 2 அல்லது 3 முறை நன்றாக உழுது, கட்டிகளை நீக்க வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 10 டன் மட்கிய தொழு உரம் இட வேண்டும்.60 செ.மீ இடைவெளியில் பார்கள் (Ridges) அமைக்க வேண்டும். பார்களின் பக்கவாட்டில் 40 செ.மீ இடைவெளியில் கற்றாழைப் பக்கக்கன்றுகளை நட வேண்டும்.
தேவைப்படும் கன்றுகள்:
ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் 15,000 முதல் 16,000 பக்கக்கன்றுகள் தேவைப்படும். கற்றாழைக்கு மிகக் குறைந்த நீரே போதுமானது. நட்டவுடன் ஒரு தண்ணீரும், பின் உயிர் தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.
மழைக்காலங்களில் நீர் தேங்காமல் வடித்தல் அவசியம். தண்ணீர் தேங்கினால் வேர் அழுகல் நோய் ஏற்படும்.செடிகள் நன்கு வளரும் வரை வருடத்திற்கு 2 அல்லது 3 முறை கைக் களை எடுக்க வேண்டும்.
நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:
கற்றாழையை பொதுவாக பூச்சிகள் தாக்குவதில்லை.அதிகப்படியான நீரால் வரும் இலைப்புள்ளி நோய் மற்றும் வேர் அழுகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முறையான வடிகால் வசதி மற்றும் இயற்கை பூஞ்சாணக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
அறுவடை மற்றும் மகசூல்:
நட்ட 10 முதல் 12 மாதங்களில் கற்றாழை முதல் அறுவடைக்குத் தயாராகும்.நன்கு முதிர்ந்த, தடிமனான வெளிப்பக்க இலைகளை மட்டும் தரையோடு ஒட்டி வெட்டி எடுக்க வேண்டும். வருடத்திற்கு 3 முதல் 4 முறை அறுவடை செய்யலாம்.
மகசூல்:
ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்குச் சராசரியாக 15 முதல் 20 டன் வரை கற்றாழை மடல்கள் மகசூலாகக் கிடைக்கும்.கற்றாழை சாகுபடி மூலம் ஒரு ஏக்கரில் ஆண்டுக்கு ₹1,50,000 முதல் ₹2,000,000 வரை நிகர லாபம் ஈட்ட முடியும்.இது ஒரு முறை முதலீடு செய்தால், தொடர்ந்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை வருமானம் தரும் ஒரு அரிய வகை மூலிகைப் பயிராகும்.
கற்றாழை சாகுபடிக்கு ஆரம்ப முதலீடு மற்றும் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு. ஆடு, மாடுகள் இதனை மேயாது என்பதால் பாதுகாப்புக் குறைபாடும் இல்லை. முறையான சந்தை வாய்ப்புகளை
(Buy-back agreements) உருவாக்கிக் கொண்டு சாகுபடி செய்தால், மிகக் குறைந்த நீர் வளத்தைக் கொண்டு விவசாயிகள் ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் பெறலாம்.
Hindusthan Samachar / vidya.b