ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை 8-வது நாளாக தீவிரம்
ரஜௌரி, 30 மே (ஹி.ச) ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தின் மஞ்சகோட் பகுதியில் உள்ள கம்பீர் முக்லான் மற்றும் டோரிமால் அடர்ந்த வனப்பகுதிகளில், இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) இணைந்து நடத்தி வர
ஜம்மு-காஷ்மீரில்  பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை 8-வது நாளாக தீவிரம்


ரஜௌரி, 30 மே (ஹி.ச)

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தின் மஞ்சகோட் பகுதியில் உள்ள கம்பீர் முக்லான் மற்றும் டோரிமால் அடர்ந்த வனப்பகுதிகளில், இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) இணைந்து நடத்தி வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, இன்று 8-வது நாளை எட்டியது.

சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த துல்லியமான உளவுத்துறை தகவலை அடுத்து, ‘ஆபரேஷன் ஷெருவாலி’ என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

கரடுமுரடான நிலப்பரப்பில் பதுங்கியிருப்பதாக கருதப்படும் நபர்களை கண்டறிய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் மற்றும் சல்லடை போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வனப்பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வீரர்கள் கடுமையான முற்றுகையை அமைத்துள்ளதாகவும், பயங்கரவாதிகள் தப்பிச் செல்லும் முயற்சிகளை தடுக்க கூடுதல் படை மற்றும் வளங்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீப மாதங்களில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையின் முக்கியமான கட்டமாக, வியாழக்கிழமை டோரிமால் வனப்பகுதியில் இருந்து கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் வீச்சு சம்பவங்கள் பதிவாகின. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் சுற்றுவளைப்பை மேலும் பலப்படுத்தி, அடர்ந்த வனப்பகுதியைச் சுற்றியுள்ள முக்கிய வழித்தடங்களில் தங்கள் இருப்பை அதிகரித்தனர்.

சந்தேகத்திற்குரிய போராளிகளை குறிப்பிட்ட பகுதிக்குள் முடக்கி வைப்பதற்காக, வலுவான மற்றும் ஊடுருவ முடியாத முற்றுகையை உருவாக்கும் நோக்கில் கூடுதல் படைகளும், தளவாட ஆதரவும் அப்பகுதிக்கு விரைந்துள்ளன.

இதற்கிடையே, தேடுதல் குழுக்கள் தங்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

சவாலான நிலப்பரப்பும், அடர்ந்த வனப்பகுதியும் இந்த பணியை சிக்கலாக்கியுள்ளதால், பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையுடனும், தொடர் கண்காணிப்புடனும் செயல்பட வேண்டியுள்ளது.

சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவர்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை குறைக்கவும் பாதுகாப்பு முகமைகள் தங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகின்றன.

அப்பகுதி முழுமையாக சோதனை செய்யப்பட்டு, அனைத்து பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் களையப்படும் வரை தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b