புதுச்சேரியில் இரு புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
புதுச்சேரி, 30 மே (ஹி.ச.) புதுச்சேரி மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில், இரண்டு புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இது புதுச்சேரியின் பொருளாத
புதுச்சேரியில் இரு புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்


புதுச்சேரி, 30 மே (ஹி.ச.)

புதுச்சேரி மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில், இரண்டு புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

இது புதுச்சேரியின் பொருளாதார மறுகட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

இதில் முதலாவது மண்டலம் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி பகுதியில் அமைய உள்ளது. இந்த மண்டலம் முழுமையாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.

இதன் மூலம் ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் பிபிஓ நிறுவனங்கள் புதுச்சேரியில் காலூன்ற வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதி சார்ந்த வேலைவாய்ப்புகளும், இளைஞர்களுக்கான தொழில்நுட்ப வேலைகளும் பெருமளவில் உருவாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டாவது மண்டலம் காரசூர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. புதுச்சேரி தொழில் மேம்பாடு மற்றும் முதலீட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த மண்டலம் பல்நோக்கு சிறப்பு பொருளாதார மண்டலமாக உருவாக்கப்படுகிறது.

உற்பத்தி, ஜவுளி, மின்னணுவியல், வாகன உதிரிபாகங்கள், மருந்து உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சாலைகள் இங்கு அமைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த இரு மண்டலங்களும் செயல்பாட்டுக்கு வரும்போது, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் பெருமளவில் ஈர்க்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பதன் மூலம் புதுச்சேரியின் பொருளாதாரம் வலுப்பெறும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

Hindusthan Samachar / vidya.b