இரவு நேர சிக்னல் குளறுபடி எதிரொலி - 48 மணி நேரத்தில் அவிநாசி சாலையில் அடுத்தடுத்து 2 விபத்துகள்
கோயம்புத்தூர், 30 மே (ஹி.ச.) கோவையின் முக்கிய போக்குவரத்து வழித்தடமான அவிநாசி சாலையில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போக்குவரத்து சிக்னல்கள் முறையாக செயல்படாததால் கடந்த 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிற
Accident


கோயம்புத்தூர், 30 மே (ஹி.ச.)

கோவையின் முக்கிய போக்குவரத்து வழித்தடமான அவிநாசி சாலையில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போக்குவரத்து சிக்னல்கள் முறையாக செயல்படாததால் கடந்த 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

முதல் சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது.

அவிநாசி சாலையில் உள்ள முக்கிய சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் உள்ள ரவுண்டானா பகுதியில், சிக்னல் சரிவர செயல்படாத நிலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து ரவுண்டானாவுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் கார் கடுமையாக சேதமடைந்த நிலையில், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதன் பரபரப்பு அடங்குவதற்குள் இன்று அதிகாலை மேலும் ஒரு விபத்து அரங்கேறியது. அவிநாசி சாலையில் சென்ற அரசுப் பேருந்து மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதாக கூறப்படுகிறது. மோதலின் தாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த இரு வாகனங்களும் அருகில் இருந்த கட்டிடத்தின் மதில் சுவரை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்தன.

இந்த விபத்தில் மதில் சுவர் முழுமையாக இடிந்து சேதமடைந்ததுடன், லாரியின் முன்பகுதியும் நொறுங்கியது. அதிகாலை நேரம் என்பதால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவிநாசி சாலையில் இரவு நேரங்களில் சிக்னல்கள் அணைக்கப்படுவதும், எச்சரிக்கை மஞ்சள் மின்விளக்குகள் செயல்படாததும் இந்த தொடர் விபத்துகளுக்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். சிக்னல் அமைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ