Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மே (ஹி.ச)
மின்சாரத் துறையில் கொள்முதல் மற்றும் ஒப்பந்தப் பணிகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், டெண்டர் நடைமுறைகளை ஆய்வு செய்வதற்காக மூன்று தனித்தனி குழுக்களை அமைக்க மின்சாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
டெண்டர் தொடர்பான அனைத்து விவரங்களையும் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே புதிய டெண்டர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று கூட்டத்தில் அமைச்சர் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொள்முதல் செயல்முறைகளிலும், ஒப்பந்தங்களை வழங்குவதிலும் எந்தவித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல், நிர்வாகத்தில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் நிலைநாட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அறிவுறுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாகவே மூன்றடுக்கு ஆய்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சந்தை பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரிபார்ப்புக் குழு, உற்பத்தியாளர்கள் குழு மற்றும் குறுக்கு சரிபார்ப்புக் குழு ஆகிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சந்தை நிலவரத்தை ஆய்ந்து விலை மதிப்பீடுகளை சரிபார்க்கும் பணியை முதல் குழு மேற்கொள்ளும். உற்பத்தியாளர்களின் தகுதி மற்றும் தரத்தை ஆய்வு செய்வது இரண்டாவது குழுவின் பொறுப்பாகும். மூன்றாவது குழு, மற்ற இரு குழுக்களின் அறிக்கைகளையும் ஒப்பிட்டு, முரண்பாடுகள் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் குறுக்கு சரிபார்ப்பு பணியை மேற்கொள்ளும்.
ஏற்கனவே வெளியிடப்பட்டு இறுதி செய்யப்படாமல் உள்ள டெண்டர்கள் மற்றும் வரவிருக்கும் புதிய டெண்டர்கள் அனைத்தையும் இந்த மூன்று குழுக்களும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் மின்சாரத் துறையில் நிதி இழப்பு தடுக்கப்பட்டு, அரசுக்கு உரிய விலையில் தரமான சேவைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b