கவின் ஆணவப் படுகொலை வழக்கில் புதிய திருப்பம்- தமிழக அரசுக்கு திருமாவளவன் பாராட்டு
நெல்லை, 30 மே (ஹி.ச.) நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் தாயாரும் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார்
திருமாவளவன்


நெல்லை, 30 மே (ஹி.ச.)

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித்தின் தாயாரும் இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற 10 மாதங்களுக்குப் பிறகு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஜூலை 27ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின் செல்வகணேஷ், காதல் விவகாரம் தொடர்பாக நெல்லை கே.டி.சி.நகர் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

தகவல் அறிக்கையிலும் குற்றப்பத்திரிகையிலும் குற்றஞ்சாட்டப்பட்டவராக இடம்பெற்றிருந்த போதிலும், நீண்ட காலமாக கைது செய்யப்படாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றமும் விசாரணை அமைப்பான சிபிசிஐடியை கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தது.

சட்ட அமலாக்க அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சலுகை காட்டப்படுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை பாதிக்கும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தொடர் அழுத்தங்களின் பின்னர், தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கையை வரவேற்று விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

கிருஷ்ணகுமாரி கைது தமிழக அரசின் நேர்மையான நடவடிக்கை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என விசிக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 10 மாதங்களுக்கு பிறகு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam