Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 30 மே (ஹி.ச.)
தமிழகத்தில் திருச்சி, விருதுநகர் உள்பட மூன்று இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொச்சியில் உள்ள என்ஐஏ மண்டல அலுவலக அதிகாரிகள் தலைமையிலான தனித்தனி குழுக்கள், ஒரே நேரத்தில் மூன்று இடங்களுக்கும் சென்று சோதனையைத் தொடங்கியுள்ளன.
கேரள மாநிலத்தில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மூன்றாவது இடம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
இன்று அதிகாலை முதல் தொடங்கிய இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை அதிகாரிகள் கைப்பற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சோதனை முடிவில் கைப்பற்றப்படும் பொருட்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை தீவிரப்படுத்தப்படும் என என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கு குறித்தும், சோதனைக்கான முழுமையான பின்னணி குறித்தும் என்ஐஏ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b