நெட்டூர் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை, 30 மே (ஹி.ச.) தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திற்குட்பட்ட நெட்டூர் பகுதியில் பட்டியல் சமூக மக்களை அச்சுறுத்தும் வகையில் நடைபெற்றதாக கூறப்படும் வன்முறைச் சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்
Velmurugan


Nn


சென்னை, 30 மே (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்திற்குட்பட்ட நெட்டூர் பகுதியில் பட்டியல் சமூக மக்களை அச்சுறுத்தும் வகையில் நடைபெற்றதாக கூறப்படும் வன்முறைச் சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தமிழ்நாட்டின் அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், சிலருக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள அவர், மக்களின் வாழ்விடங்களிலேயே பாதுகாப்பின்மை நிலவுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

சமூக ஆதிக்க மனப்பான்மை மற்றும் சாதி வெறி எந்த வடிவிலும் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது என்றும், இந்த சம்பவத்தை சாதாரண குற்றச் செயலாக கருதாமல் அதன் முழு பின்னணியையும் அரசு விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்பகுதியில் கூடுதல் காவல் பாதுகாப்பு ஏற்படுத்தி அனைத்து சமூக மக்களின் உயிர், உடைமை மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சக்திகள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ