Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 30 மே (ஹி.ச)
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அண்மைக் காலமாக நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு வி.கே. சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களை அச்சுறுத்தி சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி பணம் கேட்டு மிரட்டியதாகவும், வாகைகுளம் பகுதியில் தொழிற்கூட உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் சென்று அங்கு பணியாற்றிய நபரின் செல்போனை பறித்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதே கும்பல் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் 6 பேரை தாக்கியதோடு, மானூர் அருகே தெற்குப்பட்டி பகுதியில் மேலும் இருவரை தாக்கி காயப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தென் மாவட்டங்களில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் செயல்கள் மீண்டும் நடைபெறாத வகையில் காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்ததாகவும், அப்போது எடுக்கப்பட்டதைப் போன்ற கடுமையான சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டால்தான் மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ