Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 30 மே (ஹி.ச.)
புதுச்சேரியில் நடைபெற்ற 76-வது ஜூனியர் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழாவில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதான உள்விளையாட்டு அரங்கில், புதுச்சேரி கூடைப்பந்து சங்கம் சார்பில் 76-வது ஜூனியர் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளின் நிறைவு விழா நடைபெற்றது.
இதில் இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா மற்றும் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் மரிய வில்சன்,
முதல்வர் விஜய் தெரிவித்ததுபோல தமிழக நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இன்னும் இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். மேலும், திருத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.
முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம் வெற்றியா, தோல்வியா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,
அது மரபுசார்ந்த நடைமுறை. முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், அதனடிப்படையில் பிரதமரை சந்தித்துள்ளார் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P