திருச்சியில் யாசகம் பெற்று வந்த பெண்ணின் 6 மாத குழந்தை கடத்தல் - போலீசார் தீவிர விசாரணை..!
திருச்சி, 31 மே (ஹி.ச.) திருச்சி தெப்பக்குளம் அடுத்த கீழ ஆண்டார் வீதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் மற்றும் கஜலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. வாழ்வாதாரத்திற்காக இவர் திருச்சி பஞ்சப்பூர் நிலைய பகுதிகளில் யாசகம் பெ
குழந்தை கடத்தல்


திருச்சி, 31 மே (ஹி.ச.)

திருச்சி தெப்பக்குளம் அடுத்த கீழ ஆண்டார் வீதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் மற்றும் கஜலட்சுமி தம்பதியினர்.

இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

வாழ்வாதாரத்திற்காக இவர் திருச்சி பஞ்சப்பூர் நிலைய பகுதிகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், பஞ்சப்பூர் பேருந்து நிலையப் பகுதியில் கஜலட்சுமி யாசகம் பெற்றுக் கொண்டிருந்த போது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவருடன் பழகியதாக கூறப்படுகிறது.

இருவரும் அங்கு பேசிக்கொண்டிருந்த வேளையில், கஜலட்சுமியின் கவனத்தை திசை திருப்பி, அவரது 6 மாத பெண் குழந்தையை அந்த பெண் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து கஜலட்சுமி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், குழந்தையை கடத்திச் சென்ற பெண் மற்றொரு நபருடன் இணைந்து திருச்சி ஜங்ஷன் நோக்கி சென்றது தெரியவந்துள்ளது.

மேலும், குழந்தை தற்போது தஞ்சாவூர் பகுதியில் இருக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் தஞ்சாவூருக்கு விரைந்துள்ளனர்.

கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam