Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத் , 04 மே (ஹி.ச.)
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றியுடன் வீழ்த்தியது.
சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அதிரடி ஆட்டம் குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி தொடக்க வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா 2 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து கனோலி (0), ஷ்ரேயாஸ் ஐயர் (19), நேஹல் வதேரா (0) ஆகியோரும் விரைவில் வெளியேறியதால் பஞ்சாப் அணி 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். ஷஷாங்க் சிங் அரைசதம் அடித்து 57 ரன்களிலும், ஸ்டோய்னிஸ் 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக வந்த கேப்டன் சுப்மன் கில் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து ஜாஸ் பட்லர் மற்றும் சாய் சுதர்சன் இணைந்து அணியை முன்னேற்றினர்.
இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடியதால் பவர்பிளே முடிவில் குஜராத் அணி 58 ரன்கள் எடுத்தது.
பட்லர் 26 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சாய் சுதர்சனுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் சுதர்சன் நிலைத்து நின்று விளையாடி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் தெவாட்டியா 2 ரன்களிலும், ஹோல்டர் 5 ரன்களிலும் வெளியேறியதால் ஆட்டம் பரபரப்பானது. கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை ஸ்டோய்னிஸ் வீசினார். முதல் பந்து வைடாக சென்றது. அடுத்த பந்தில் அர்ஷத் பவுண்டரி அடித்தார்.
2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வாஷிங்டன் சுந்தர் சிக்சர் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் குஜராத் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களுடனும், அர்ஷத் 8 ரன்களுடனும் இருந்தனர்.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் வைசாக் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA