17-வது சட்டசபைக்குள் நுழையும் இளம் வயது த.வெ.க எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன்
சென்னை, 05 மே (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சியமைக்கும் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 108 இடங்களை கைவசம் வைத்துள்ள தவெகவுக்கு, கூடுதலாக 10 முதல் 11
Sabari Iyengaran—the young TVK MLA


சென்னை, 05 மே (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சியமைக்கும் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 108 இடங்களை கைவசம் வைத்துள்ள தவெகவுக்கு, கூடுதலாக 10 முதல் 11 இடங்கள் தேவை.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக தவிர்த்து காங்கிரஸ் 5, பாமக 4, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் ஆகியவை தலா 2 தொகுதிகள், தேமுதிக, அமமுக தலா 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இந்தக் கட்சிகளில் சிலவற்றை தனது கூட்டணிக்கு கொண்டுவர தவெக தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் த.வெ.கவின் வெற்றி வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

அந்த வகையில் 17வது சட்டசபைக்குள் நுழையும் தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் வயது எம்எல்ஏ என்ற பெருமையை 29 வயதான சபரி ஐயங்கரன் தட்டிச் சென்றுள்ளார்.

தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சட்டப் பேரவை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சபரி ஐயங்கரன், கம்பம் சட்டமன்ற தொகுதியில் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் ஆண்டிபட்டி மற்றும் போடி தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பாண்டி மற்றும் பிரகாஷ் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

இதனிடையே, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை விட 19,321 வாக்குகள் அதிகம் பெற்று தவெக வேட்பாளர் சபரி ஐயங்கரன்

(மொத்த வாக்குகள் 85,656) வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு வயது 29.

இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் இளம் வயது எம்எல்ஏ என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இவர் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு தவெக சார்பில் வெற்றி பெற்றதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b